செல்லிடப்பேசி மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் வகையில், ஏற்கெனவே உள்ள சட்டங்களில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
செல்லிடப்பேசி மற்றும் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை; விருப்பப்பட்டால் மட்டுமே சேர்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆதார் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.