சென்னை:இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
நாடு முழுவதும் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், பார்மசி கல்லுாரிகள், ஆர்கிடெக் கல்லுாரிகள் உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். சுயநிதி பல்கலைகள், இதுவரை, யு.ஜி.சி.,யின் அனுமதியை மட்டும் பெற்று, இன்ஜினியரிங் பாடங்களை நடத்தி வந்தன.
ஆனால், சுயநிதி பல்கலைகளும், வரும் கல்வி ஆண்டு முதல், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரத்தை கட்டாயம் பெற வேண்டும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.எனவே, சுயநிதி பல்கலைகள், புதிய கல்வி நிறுவனங்களுக்கான விதிகளை பின்பற்றி, அங்கீகாரம் பெற வேண்டும் என, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. இந்த அங்கீகாரம் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது. புதிய கல்லுாரிகள் மற்றும் சுயநிதி பல்கலைகள், பிப்ரவரி, 3 வரையும், ஏற்கனவே அங்கீகாரம் பெற்றுள்ள கல்லுாரிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்க, பிப்., 8 வரையிலும் விண்ணப்பிக்கலாம்.