குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ள இந்த ஹெலிகாப்டர்கள், சண்டீகருக்கு கொண்டு செல்லப்படும். இந்திய விமானப் படையில் நிகழாண்டு இறுதியில் முறைப்படி இந்த ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்படும்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 22 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது.
முதல் கட்டமாக, 4 சினூக் ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு போயிங் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்களின் வரவால், இந்திய விமமானப் படையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றையும், ராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்வதற்கு மிக முக்கியமாக சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதுதவிர, பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், போர்க்காலங்களில் ஒட்டுமொத்தமாக அகதிகளை வெளியேற்றுவதற்கும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம்.