‘பலரின் உதவி மற்றும் ஊக்கத்தால் தான், ஆசிய அளவிலான ஊரக விளையாட்டில், மும்முறை தாண்டும் தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றேன்,” என, அரசுப் பள்ளி மாணவர், சாந்தகுமார் பெருமையுடன் தெரிவித்தார்.முறையான பயிற்சியும், திட்டமிடலும், விடாமுயற்சியும், ஊக்குவிப்புமே, விளையாட்டு வீரரின், ஒலிம்பிக் கனவை நனவாக்க இயலும்.சமீபத்தில், நேபாளில் நடந்த, ஆசிய அளவி லான ஊரக விளையாட்டில், மும்முறை தாண்டும் தடகள போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற சாந்தகுமார், தங்கப்பதக்கம் பெற்று, சாதனை படைத்து உள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் சாந்த குமார், 17, ‘உலக அரங்கில், இந்தியாவிற்காக, பதக்கம் வெல்ல வேண்டும்’ என்பதே, தன் தீராத தாகம் என தெரிவித்தார்.அவருக்கு வாழ்த்து கூறி, பேட்டி கண்டோம்…உங்களை பற்றி சொல்லுங்கள் ?திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர், மேட்டுக்காலனி பகுதியில் வசிக்கிறோம். அப்பா, எஸ்.ராஜா; தனியார் நிறுவன ஊழியர். அம்மா, ஜெயந்தி. அவ்வப்போது ஏழ்மை எட்டிபார்க்கும், நடுத்தரக் குடும்பம்.விளையாட்டில் ஆர்வம் வந்தது எப்படி ?ஆறாம் வகுப்பு முதலே, விளையாட்டில் ஆர்வம் அதிம். பள்ளி விளையாட்டுத் துறை ஆசிரியர், ஆர்.குபேரன், என்னை அதிகமாக ஊக்கிவிப்பார். அவர் தான், என் பயிற்சியாளர். 9ம் வகுப்பில் இருந்து, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றேன்.உங்கள் பயிற்சி நேரம்?முழு பயிற்சியும், பள்ளி மைதானத்தில் தான். தினமும் காலை, 4:30 மணியில் இருந்து, 8:30 மணிக்கும் பயிற்சி எடுப்பேன். மாலையில், பள்ளி முடிந்ததும், மைதானம் சென்று விடுவேன்.இதுவரை வென்ற பதக்கங்கள்?கடந்த ஆண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடந்த, தேசிய ஊரக விளையாட்டு போட்டியில், தங்கப்பதக்கம் பெற்றேன்.சமீபத்தில், நேபாளத்தில் நடந்த, ஆசிய அளவில் நடந்த போட்டியில், மும்முறை தாண்டும் போட்டியில், தங்கம் வென்றுள்ளேன்.இதுவரை, 100 போட்டிகளுக்கு மேல் பங்கேற்று, 17 தங்கம், எட்டு வெள்ளி, 10க்கு மேற்பட்ட வெண்கலப் பதக்கங்கள் வென்று உள்ளேன்.மற்ற விளையாட்டில் ஈடுபாடு உண்டா?நான், 10ம் வகுப்பு வரை, வாலிபால் போட்டியிலும் பங்கேற்று இருக்கிறேன். அதில், நான் அதிகமாக குதிப்பதை கவனித்த பயிற்சியாளர், தடகளத்தில் உள்ள மும்முறை தாண்டுதலில் ஈடுபடுத்தினார்.ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தருணம்?அது, என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. ஆசிய போட்டிக்கு, நான் தகுதி பெற்றதும், பலரும் எனக்கு உதவிகள் செய்தனர். அவர்கள் அனைவரையும் மனதில் வைத்து தான், களத்தில், வெற்றி நோக்கி ஓடினேன்.அதேபோல், என் பயிற்சியாளர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், அனைவருக்கும், இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்க, கடமைப்பட்டிருக்கிறேன்.சாதிக்க நினைப்பது என்ன?தேசிய மற்றும் ஆசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று விட்டேன். அடுத்தது, என் லட்சியம், ஒலிம்பிக் தான். best swiss replica watches அடுத்த ஆண்டு, இந்தியாவிற்காக ஓடி, ஒலிம்பிக் பதக்கம் பெற்றுத் தருவேன்.அவரின் லட்சியம் நிறைவேறவும், இந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும் வாழ்த்து கூறி, கிளம்பினோம்.இதுபோன்ற, துடிப்புள்ள, அரசு பள்ளி மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், உதவி கிடைத்தால், நிச்சயமாகவே, சர்வதேச அளவில், இந்தியாவிற்கு பதக்கங்கள் குவியும்.