கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 ஆவது கட்டமாக நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 141 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குமரி மாவட்டத்தில், ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 2 ஆவது கட்டமாக நிலம், வனங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணிக்கு மாவட்ட வன அலுவலர் ஆனந்த் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுவில் பறவை ஆராய்ச்சியாளர் ராபர்ட் கிறப், சூழல் கல்வியாளர் டேவிட்சன், வனத்துறை அதிகாரிகள் புஷ்பராஜ், கிருஷ்ணமூர்த்தி என, 30-க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழுவினர், குமரி மாவட்ட வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கிளாமலை, மாறாமலை, காளிகேசம், பாலமோர், வீரப்புலி, வேளிமலை, மகேந்திரகிரி, அசம்பு, இஞ்சிக்கடவு, குன்னிமுத்துசோலை, உலக்கை அருவி, முக்கடல், உள்ளிட்ட வனப்பகுதிகளுக்குச் சென்று பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்தப் பணி, காலை 10 மணி வரை நடந்தது. இந்த கணக்கெடுப்பின்போது, ஒரு சில பகுதிகளில் பனி மூட்டம் அதிகாலை 9 மணி வரை நீடித்ததால் பறவைகளை கண்டறிவதில் ஆராய்ச்சியாளர்களுக்கு சிறிது சிரமம் ஏற்பட்டது. பறவைகள் கணக்கெடுப்பு குறித்து சூழல் கல்வியாளர் டேவிட்சன் கூறியதாவது:
குமரி வனங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் அரசு ரப்பர் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் ரப்பர் பயிரிட்டுள்ளனர். ரப்பர் மரங்களில் போதிய கிளைகள் இல்லாமல், காற்றில் எப்போதும் அசைந்து கொண்டிருப்பதால் பறவைகள் அவற்றில் வாழ்வதில்லை. ரப்பர் மரங்களில் கோடை காலத்தில் கந்தகம், துத்தநாகம், மாலத்தியான் மற்றும் கொடிய நச்சுத்தன்மை உடைய பூச்சிக் கொல்லிகளை அடிப்பதால், பறவைகள் உண்கின்ற பூச்சிகள், புழுக்கள், லார்வாக்கள், கூட்டுப்புழுக்கள் அழிகின்றன. மேலும் பூச்சிக்கொல்லி அடிப்பதால் பறவைகளின் எண்ணிக்கை குறைவதுடன் சில இனங்கள் அழிய வழி வகுக்கின்றன. இதனால் அரிய பறவைகளின் வாழ்வு கேள்விக் குறியாகிறது.
கோடை காலம் பறவைகளின் வாழ்வில் மிக முக்கியகாலம். ஏனென்றால் இக்காலத்தில் பறவைகள் கூடு கட்டி முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்யும். ஆனால், பட்டுப்போன மரங்களை வனங்களில் இருந்து அகற்றுவதால் மரப் பொந்துகளில் வாழ்கின்ற ஆந்தை, குக்குருவன், இருவாச்சிஆகிய பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதால் பறவைகள் அழிந்துபோகின்ற வாய்ப்புள்ளது. எனவே, பறவைகளைப் பாதுகாப்பது மனிதனின் தலையாய கடமை என்றார் அவர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வனப்பகுதிகளில் நடந்த கணக்கெடுப்பில் மரகதப்புறா, மலை மைனா, நீலச்சிட்டு, பச்சை சிட்டு, தோட்ட கள்ளன், மஞ்சள் வாலாட்டி, நீலமுக செண்பகம், சிவப்பு மீசை சின்னான் உள்பட 141 வகையான பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 4 அரிய வகையினங்களும் அடங்கும்.
“ஹார்ன்பில்” எனப்படும் இருவாச்சி பறவைகள், குமரி வனங்களில் அதிக அளவில் காணப்பட்டது. இந்த வகையில் பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து, ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து, அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். இந்த வகை பறவைகள் தற்போது குமரி மாவட்ட வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வசிக்கின்றன.
கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து இருக்கிறது. இருப்பினும், 3 ஆவது கட்ட கணக்கெடுப்புக்கு பின்னரே குமரியில் எத்தனை வகை பறவையினங்கள் வசிக்கின்றன என்ற முழு விவரம் தெரிய வரும் என்றார் அவர்.