நாகர்கோவிலில் புத்தகக்கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது.
இது குறித்து, மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அளவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம். இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் பொது அறிவினை வளர்த்திடவும், தாங்கள் ஈடுபட்டுள்ள தொழிலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை கையாளவும், பள்ளி மாணவர், மாணவிகளின் கல்வி அறிவை பெருக்கி, அவர்களது எதிர்கால வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியினை உறுதிப்படுத்திடவும், அதற்கான வழிகாட்டியாக அமைந்திடவும், கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (ஆஅடஅநஐ) இணைந்து கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் உறுதுணையுடன் நடத்தும், புத்தகக் கண்காட்சி, நாகர்கோவில், அனாதைமடம் மைதானத்தில் பிப்.15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில், 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் மருத்துவம், பொறியியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், வரலாறு, பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த புத்தகங்கள் இடம் பெறுகின்றன.
மழலையர்கள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பு வாசகர்களுக்கும் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான புத்தகங்களும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன. மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்களும், மாணவர், மாணவிகளும், கல்வியாளர்களும், வணிக நிறுவனத்தினரும், புதிய தொழில்முனைவோர்களும் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
கண்காட்சி நடைபெறும் நாள்களில் உலக அளவில் புகழ் பெற்ற பல்வேறு உலக நாடுகளின் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளது. கண்காட்சிக்கு அனுமதி இலவசம் . மேலும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு பேச்சாளர்கள், அறிவு சார்ந்த பல்வேறு தலைப்புகளில் பேச்சு, கவியரங்கங்கள் மற்றும் நகைச்சுவை சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன. இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, புத்தகக் கண்காட்சியினை கண்டு களித்து, புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.