உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு சனிக்கிழமை (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் இதுவரை பெரியவர்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ரூ. 30 நுழைவுக் கட்டணம் தற்போது ரூ. 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல சிறுவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 15-இல் இருந்து ரூ. 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திரைப்படப் படப்பிடிப்புக்காக நாளொன்றுக்கு ரூ. 25,000-ஆக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் தற்போது 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புகைப்படம், விடியோ எடுப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவின் பராமரிப்புக்கென ஒதுக்கப்படும் தொகையில் செலவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதை ஈடுகட்டுவதற்காகவே இக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்தக் கட்டண உயர்வு சனிக்கிழமை முதல் (டிசம்பர் 15) அமலுக்கு வந்துள்ளது.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு 2017ஆம் ஆண்டில் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். நடப்பாண்டில் இதுவரை 27 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தந்துள்ளனர். தற்போது உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் பனிப்பொழிவு அதிக அளவில் இருப்பதால் மலர் பாத்திகளை பனியிலிருந்து காக்கும் வகையில் ஸ்பிரிங்ளர் மூலம் காலை- மாலை இரு வேளைகளிலும் தண்ணீர் பாய்ச்சுவதோடு, கோத்தகிரி மெலார் செடிகளைக் கொண்டு மலர் பாத்திகள் மூடி வைக்கப்படுகின்றன.
பூங்காவின் முக்கிய அம்சமான பரந்த புல்வெளியில் தற்போது சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.