தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித் துறைக்கு 28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இடை நிற்றலைக் குறைப்பதற்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ.5,000 சிறப்பு ஊக்கத் தொகையை தமிழக அரசு தொடர்ந்து வழங்கும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), அனைவருக்கும் இடை நிலைக் கல்வி இயக்கம் (ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள முறையே ரூ.2,109 கோடி மற்றும் 1,092 கோடி ரூபாயை மத்திய அரசு இதுவரை விடுவிக்கவில்லை. இருப்பினும் மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் நலன் கருதி இந்தத் திட்டங்களை அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இந்த இரு திட்டங்களும் 2019-2020-ஆம் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா) என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு அதைச் செயல்படுத்த ரூ.2,791.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 4.19 லட்சம் குழந்தைகள்: வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதற்கு வழிவகை செய்யும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முழு உத்வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இதுவரை 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்துக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.248.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக் கல்வித் துறைக்காக 28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.