நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக அனைத்து விதமான கட்டணங்களையும் உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி பேராசிரியர்களுக்கு முன் தேதியிட்டு உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான நிலுவைத் தொகை உள்பட பல்வேறு பணப் பலன்கள் பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இதற்கு, கடந்த காலங்களில் வருவாய் உயர்த்தப்படாமல், கட்டட கட்டுமான ஒப்பந்தங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இருப்புத் தொகையை ரூ. 240 கோடி வரை செலவழித்ததே முக்கியக் காரணம் என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை பன்மடங்கு உயர்த்த முடிவு செய்து, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் தராததால், கட்டணங்களை உயர்த்தும் பல்கலைக்கழகத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே… இந்த நிலையில், கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே, கட்டணங்களை உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் தற்போது முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் கூறியது:
பல்கலைக்கழகத்தின் கட்டணங்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் பன்மடங்காக உயர்த்துவதற்குத்தான், பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநரின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், பல்கலைக்கழகத்தின் தேவைகளுக்காக கட்டணத்தை ஓரளவுக்கு உயர்த்த ஆளுநரின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. துணைவேந்தருக்கே அந்த அதிகாரம் இருக்கிறது. எனவே, பல்வேறு வகையான கட்டணங்களை எந்த அளவுக்கு உயர்த்துவது என ஆலோசித்து முடிவெடுக்க துணைவேந்தருக்கு ஆட்சிக் குழு அதிகாரம் அளித்துள்ளது. துணைவேந்தரின் அந்த முடிவு மீண்டும் ஆட்சிக் குழுவில் ஆலோசிக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
என்னென்ன கட்டணங்கள்? பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தைப் பொருத்தவரை, அதிலுள்ள அனைத்துக் கட்டணங்களும் கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளன. குறிப்பாக விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 என்ற அளவில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. பிற பல்கலைக்கழகங்களுக்கு இணையாக விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கட்டணத்தை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கப்படும் பேராசிரியர்களுக்கு கல்வித் தகுதிக்கான பல்கலைக்கழக ஒப்புதலுக்கு இதுவரை எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதற்கு, இனி ரூ. 2,000 வரை வசூலிக்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதுபோல, கல்லூரிகளில் புதிய படிப்புகள் தொடங்குவதற்கான கட்டணம், கூடுதல் வகுப்புப் பிரிவுகளை தொடங்குவதற்கான அனுமதி கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்களை இரு மடங்காக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறுகையில், பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக கட்டணங்கள் எதுவும் உயர்த்தப்படாமல் உள்ளது. இப்போது நிதிநிலைமையை சமாளிப்பதற்காக, ஆட்சிக் குழு எனக்கு அதிகாரமளித்துள்ளது. அதனடிப்படையில், பல்வேறு கட்டணங்களை ஓரளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.