இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ. இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.
இந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது.பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புவி இயைபு மாற்று சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது. உடனடியாக ஹசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் இந்த செயற்கைக்கோளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. செயற்கைக்கோளில் உள்ள திரவ அப்போஜி மோட்டாரை இயக்கி, வட்ட புவிநிலை சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை நகர்த்தும் பணியில் ஹசன் மையம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.