மரபு வழி இதய நோய் பாதிப்புகளை அறிந்து கொள்ளவும், அதுதொடர்பான மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் வாயிலாக, இசிஜி அல்லது எக்கோ தகவல்களை பதிவேற்றம் செய்தால், அதற்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃப்ரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனை மற்றும் இம்மி லைஃப் நிறுவனம் ஆகியவை இணைந்து அந்த செயலியை வடிவமைத்துள்ளன. அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ள அந்தச் செயலியின் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபு வழி இதய நோய்களுக்கான சிகிச்சைகள் தொடர்பான சர்வதேசக் கருத்தரங்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, பிரிட்டன் இதய நோய் சிகிச்சை அமைப்பின் தலைவர் டாக்டர் பெர்ரி எல்லியட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், நாடு முழுவதிலும் இருந்து சுமார் 150-க்கும் மேற்பட்ட இதய சிகிச்சை நிபுணர்கள் அதில் பங்கேற்றனர். கருத்தரங்கின் ஒரு பகுதியாக கார்டியோமையோபதி இந்தியா (Cardiomyopathy india)) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து சி.ஆர்.ஒய். கார்டியோமையோபதி கிளினிக் தலைவர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரோக்கியமாக இருக்கும் மனிதர்கள் திடீரென இறக்கக் கூடிய சம்பவங்களை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். அதிலும், இளம் வயதில் உள்ளவர்களுக்கு இத்தகைய மரணங்கள் நேர்வதை கண்கூடாகப் பார்க்கிறோம்.
இதுபோன்ற மரணங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. இதனை பெரும்பாலானோர் மாரடைப்பு எனத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். இதயச் செயலிழப்பு காரணமாகவே திடீர் மரணங்கள் நிகழுகின்றன.
இதற்கு மரபு வழி பாதிப்புகள் முக்கிய காரணமாக உள்ளன. குடும்பத்தில் ஒருவர் இதய செயலிழப்பு காரணமாக இறந்தால், அவரது வாரிசுகளுக்கும் அந்த பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதுதொடர்பான விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை. தமிழகத்தில் 400 குடும்பங்களில் ஒருவருக்கு இத்தகைய பாதிப்பு உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட செயலியானது மரபு வழி இதய நோய்களை அறிந்து கொள்வதற்கு பெரிதும் பயன்படும். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.
ஜனவரி மாதம் முதல் அந்தச் செயலி பயன்பாட்டுக்கு வரும் என்றார் அவர்.