மாநில அளவிலான தடகளப் போட்டிக்கான நடுவர் தேர்வு முகாம் களியக்காவிளையில் நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
மாநில அளவில் நடைபெறும் தடகளப் போட்டிகளுக்கான நடுவர்களை தேர்வு செய்யும் இம்முகாமை கல்லூரிச் செயலர் எக்கர்மென்ஸ் மைக்கேல் தொடங்கிவைத்தார். முகாமில், தடகளப் போட்டி நடுவர்களின் பணிகள் குறித்து இக்கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரராஜன், கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரைட்செல்வகுமார் ஆகியோர் பேசினார்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தடகள அமைப்பு தேர்வாணையர் ஸ்ரீனிவாசன் தேர்வு நடத்தினார். இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இம்மாதம் 29 ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் மாநில மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்வின் போது, சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு வழங்குகிறார்.
இம்முகாமில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்வு முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.