ரூ.1 வாங்கிக் கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ தம்பதிக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், மேல்காட் மாவட்டத்தில் நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏழை கோர்கு பழங்குடியினருக்கு மருத்துவர்கள் ரவிந்திர கோலே, அவரது மனைவி ஸ்மிதா ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். இங்கு வருவோருக்கு சிகிச்சை கட்டணமாக ரூ.1, ரூ.2 ஆகியவற்றை அவர்கள் பெற்றனர். இவர்களது சேவையை கௌரவிக்கும் வகையில், 2 பேருக்கும் மத்திய அரசு பத்ம விருது அறிவித்துள்ளது.
ஒடிஸாவில் மலைப் பகுதியில் தேங்கியிருக்கும் நீரின்மூலம், மலை அடிவாரத்தில் உள்ள 100 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய தனியாளாக 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் அமைத்த தாத்ரி நாயக், டீக்கடை நடத்தி, அதில் வரும் லாபத்தை, சேரிப்பகுதி மக்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவிய தேவரபள்ளி பிரகாஷ் ராவ், பிகாரில் மகாதலித் சமூக குழந்தைகள் கல்வி பயில ஆங்கில பள்ளி ஆரம்பித்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஜோதிகுமார் சின்ஹா, உத்தரப் பிரதேசத்தில் 23 ஆண்டுகளாக 1,200 பசுக்களை கோசாலை அமைத்து பராமரித்து வரும் ஜெர்மன் நாட்டுக்காரர் பிடெரிக் இரினா புருனிங் உள்ளிட்டோருக்கும் பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.