மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு மத்திய அரசால் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வினால் கிராமப் புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதைத் தடை செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பொதுவாக நீட் தேர்வு இளங்கலை மற்றும் முதுகலை என இரண்டு தேர்வாக தனித்தனியாக நடத்தப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வை தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான நீட் முதுகலை (MD) தேர்வு கடந்த ஜனவரி 6-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 1,48,000 மாணவர்கள் எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் இந்தியாவிலேயே தமிழக மாணவர்கள்தான் அதிகம் தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மொத்த இந்தியாவிலும் 79,633 மாணவர்கள் முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர். அவர்களில் 11,121 பேர் தமிழக மாணவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
முதுகலை நீட் தேர்வை 17,067 தமிழக மாணவர்கள் எழுதினர். அவர்களில் 11,121 பேர் தேர்ச்சி பெற்று முதல் இடம் பிடித்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து 15,216 மாணவர்கள் தேர்வு எழுதினர் அதில் 9,219 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மகாராஷ்ட்ராவில் உள்ள 15,451 மாணவர்களில் 7,441 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவில் 6,323 மாணவர்களும், உத்தரப் பிரதேசத்தில் 4,173 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நேற்று வெளியான தேர்வு முடிவுகளின்படி இந்த ஆண்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள முதுகலை மருத்துவப் படிப்புகளில் அதிகம் தமிழ் மாணவர்கள் இருப்பார்கள் என்றும் இந்தியாவில் உள்ள ஏழு முதுகலை மாணவர்களில் ஒருவர் தமிழர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சதவிகிதத்தின்படி சண்டிகர் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்குள்ள 81.58 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவா 76.50%, டெல்லி 75.70%, கேரளா 75.13%, மேகாலயா 71.11% மற்றும் ஜம்மு – காஷ்மீர் 69.83% மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். தமிழகத்திலிருந்து 65.16 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.