புதுடில்லி : ஓ.பி.சி., பிரிவுக்கான இட ஒதுக்கீட்டை பகிர்ந்தளிப்பது தொடர்பான ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள கமிஷன், ‘ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என, பரிந்துரை செய்து உள்ளது.
ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டை, இந்தப் பிரிவின் கீழுள்ள ஜாதிகளுக்கு பகிர்ந்து அளிப்பது தொடர்பான பரிந்துரைகள் வழங்க, 2017ல், தனி கமிஷன் அமைக்கப்பட்டது.
இதுவரை நான்கு முறை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த கமிஷனின் பதவிக்காலம், 2019, மே, 31ல் முடிகிறது. இந்தக் கமிஷனின் தலைவரான, ஓய்வு பெற்ற நீதிபதி, ஜி.ரோஹிணி, மத்திய அரசுக்கு, தன் பரிந்துரையை அனுப்பியுள்ளார்.
அதில் கூறியுள்ளதாவது: ஓ.பி.சி., பிரிவில் உள்ள ஜாதிகள் மற்றும் அவற்றின் மக்கள்தொகை தொடர்பான எந்த புள்ளி விபரங்களும் அரசிடம் இல்லை. குறிப்பிட்ட ஜாதியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரிந்தால் தான், அவர்களுக்கான, உள் ஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய முடியும்.அதனால், மாவட்ட அளவில், ஓ.பி.சி., உட்பட, ஜாதிகள் மற்றும் அதன் மக்கள்தொகை குறித்து கணக்கெடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.