சென்னை: இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’, செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌ஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

2250 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோளின் ஆயுள்காலம் 8 ஆண்டுகள் ஆகும்.இதில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும், இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் ஏவப்பட்ட 19 நிமிடத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.

இந்த செயற்கைகோள் மூலம் இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இணைக்கலாம்.

‘இன்சாட் 4சிஆர்’ செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் முடிகிறது, அதற்கு மாற்றாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

முன்னதாக ஜிசாட் 7 மற்றும் ருக்மணி ஆகிய செயற்கை கோளை இந்திய கடற்படைக்காக இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தி இருந்தது.

error: Content is protected !!