குமரி மாவட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
அருமநல்லூர், குறத்தியறை, செண்பகராமன்புதூர், தோவாளை, தெங்கம்புதூர், பெருவிளை, கொடுப்பைக்குழி, கண்டன்விளை, கண்ணாட்டுவிளை, மத்திக்கோடு, கீழ்குளம், விளவங்கோடு, கடையால், காட்டாத்துறை ஆகிய 14 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தலா ரூ.62,500 வீதம் மொத்தம் ரூ.8.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்து விஜயகுமார் எம்.பி. பேசியது:
இம்மாவட்டத்தில் உள்ள 59 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் முதல்கட்டமாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 24 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 35 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்நாடு அரசு கல்வித்துறை மற்றும் கனிமவளத் துறை மூலமும், மாவட்ட நிர்வாகம் மூலமும் நிதி ஒதுக்கீடு செய்து வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மாவட்ட அரசு வழக்குரைஞர் ஞானசேகரன், அதிமுக நிர்வாகி கனகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.