தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ராணி வேலுநாச்சியார் பாடத்தில், சிவகங்கை சீமை அமைச்சரான தாண்டவராயன் மறைவு ஆண்டு தவறாக இருக்கிறது. இந்த பிழையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.வரலாற்று எழுத்தாளரும், மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளருமான கண.முனியசாமி கூறும்போது, ‘‘சிவகங்கை அமைச்சர் தாண்டவராயனின் மறைவு ஆண்டு கிபி 1773 நடுப்பகுதியாகும். டாக்டர் எஸ்.எம்.கமால் எழுதிய ‘சீர்மிகு சிவகங்கை சீமை’ வரலாற்று நூலிலும் இந்த ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ராணி வேலுநாச்சியார் குறித்த பாடத்தில், 1780ம் ஆண்டில் வேலுநாச்சியார் தலைமையில் திண்டுக்கல் கோட்டையில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் தாண்டவராயன் கலந்து கொண்டார் என தவறான தகவல் இடம்பெற்றுள்ளது. கூட்டத்தில், கவலை நிறைந்த குரலில் வேலுநாச்சியார் கூறும்போது, ‘‘நாம் சிவகங்கையை இழந்து 8 ஆண்டுகள் ஆகிவிட்டன’’ என்கிறார். ‘‘கவலைப்படாதீர்கள் அரசியாரே. நாம் சிவகங்கையை மீட்கும் நேரம் நெருங்கி விட்டது’’ என்று தாண்டவராயன் கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1773ம் ஆண்டு இறந்த அவர், 1780ல் நடந்த கூட்டத்தில் எப்படி கலந்து கொண்டு ஆலோசனை கூறி இருக்க முடியும்? 1780ல் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மருது சகோதரர்களும், விருப்பாச்சி பாளையக்காரர் கோபாலநாயக்கர் மற்றும் சில குறுநில மன்னர்களுமே. தாண்டவராயன் மறைந்த ஆண்டான கிபி 1773ல் சிவகங்கை சீமை வேலுநாச்சியார் பாத்தியதையில் இல்லை. ஆற்காடு நவாப்பின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குசைன் நகர் என்ற பெயரால் அன்று அது அழைக்கப்பட்டது. 1773ல் தாண்டவராயன் தனது 73வது வயதில் மரணமடைந்தார். வரலாற்று நிகழ்வுகளில் பிழை ஏற்படக்கூடாது. அது எதிர்வரும் சந்ததியினரை தவறான வழியில் இட்டு சென்று விடும். பாடநூல் முதல்பதிப்பு 2018 என குறிப்பிடப்பட்டுள்ளதால், அடுத்த பதிப்பில் இதனை திருத்திட வேண்டும். இனியாவது துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்தை கேட்டு, பாடநூல் உருவாக்கமும், நூல் அச்சாக்கமும் பிழையின்றி வெளியிட வேண்டும்’’ என்றார்.