நாகர்கோவில்: நாகர்கோவில் – -கன்னியாகுமரி இடையே சுற்றுலா பயணியருக்காக, பழமையான நீராவி இன்ஜின் ரயில், 7ல் இயக்கப்படுகிறது.சுற்றுலா பயணியரை கவர்ந்திட பழமையான நீராவி இன்ஜினால் இயக்கப்படும், ‘ஹெரிடேஜ் ரயில்’ என்ற பாரம்பரிய ரயில் பயணம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட கோட்டங்களில் நடந்த இந்த பயணம், வரும், 7ல் நாகர்கோவில் – கன்னியாகுமரி இடையே நடக்கிறது. இதற்காக, சில நாட்களுக்கு முன், பழமையான நீராவி இன்ஜின் நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.தற்போது இந்த இன்ஜினுக்கு பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, சில நாட்களாக பரிசோதனை ஓட்டமும் நடந்தது.இந்த பயணத்தின் போது, ஒரு பயணியர் பெட்டி, ஒரு கார்டு பெட்டி மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பயணியர் பெட்டியில், 40 பேர் பயணிக்கலாம். சொகுசு இருக்கைகள் மற்றும் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில் பயணிக்க, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பயணியரிடையே உள்ள வரவேற்பை பொறுத்து,பாரம்பரிய ரயில் ஓட்டம், மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கவும் வாய்ப்புள்ளது என்று, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.