புதுடில்லி ஒரு குறிப்பிட்ட சுற்றுலா தலத்துக்கு செல்வதற்கு, இனி ரயிலில் டிக்கெட் கிடைக்குமா என காத்திருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட இடத்துக்கு பயணம் செய்யாமலேயே, சுற்றுலா செல்லும் அனுபவத்தை, ரயில்வே அளிக்க உள்ளது.இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியதாவது:’விர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும், சிறப்பு கருவி மூலம், ஒன்றை நேரடியாக பார்க்கும் அனுபவத்தை பெற முடியும். இந்த வசதியைப் பயன்படுத்தி, ரயில்வே சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், குறிப்பிட்ட சுற்றுலா பகுதி தொடர்பான சிறப்பு தொகுப்பு, ‘கூகுள்’ இணையதள நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.இந்த திட்டத்தின்படி, சிறப்பு கண்ணாடியின் மூலம், நாம் விரும்பும் சுற்றுலா தலத்துக்கு பயணம் மேற்கொள்ளும் அனுபவத்தை, எங்கிருந்தும் பெற முடியும். இந்த வசதியை, ரயில்களிலும் அளிக்க உள்ளோம். உதாரணமாக, சென்னை யிலிருந்து திருச்சிக்கு பயணிக்கும் போது, சிறப்பு கண்ணாடி மூலம், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களை நேரடிஆக பார்ப்பது போன்ற அனுபவத்தை பெற முடியும்.மேலும், இந்த வசதியை, கல்வித் திட்டமாகவும் செயல்படுத்த உள்ளோம். அதன்படி, குறிப்பிட்ட சுற்றுலா தலம் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இது தொடர்பாக பேச உள்ளோம்.இந்த புதிய முயற்சியின் மூலம், நம் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த விபரங்களை, மாணவர்களும், மக்களும் அறிந்து கொள்ள முடியும். இதனால், சுற்றுலாவும், ரயில்வேயும் வளர்ச்சி அடையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.