கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்த 3 ஆம் கட்ட ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுருக்கமுறை திருத்தம் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் மாவட்டப் பார்வையாளரும், புள்ளியியல்துறை ஆணையருமான அதுல்ஆனந்த் தலைமை வகித்தார். ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது பெறப்பட்ட பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் தொடர்பான மனுக்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்த விவரம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள் ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முகவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் விவரங்களை அந்தந்த வட்டாட்சியர்கள் பெற்று, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வை மேம்படுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை விவரத்தை அந்தந்த வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில், மாவட்ட வருவாய்அலுவலர் இரா.ரேவதி, நாகர்கோவில் சார் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.சுகன்யா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுப்பிரமணியன், நாகர்கோவில் நகராட்சி ஆணையர் சரவணகுமார், அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு வட்டாட்சியர்கள், தேர்தல்பிரிவு துணை வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.