நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக, டெல்லியைச் சேர்ந்த தமிழக மாணவி இனியாள் ‘aNEETa’ என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

அரியலூர் மாணவி அனிதா, 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற போதும், மருத்துவப் படிப்பிற்கான தகுதித் தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால், தற்கொலை செய்து கொண்டார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மாணவி அனிதாவின் மரணத்திற்குப் பின், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஜெகதீசன் என்பவரின் மகளான இனியாள், அங்குள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்புப் படித்து வருகிறார். அவர் மாணவி அனிதாவின் நினைவாக ‘aNEETa’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார். இந்த செயலியில் நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு தேவையான மாதிரி வினாத்தாள்களும், தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பேட்டியளித்த மாணவி இனியாள், “12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களை எடுத்த போதும் மாணவி அனிதாவால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. நீட் தேர்வு எழுத பயிற்சி வேண்டும் என்பது புரிந்தது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயலியை ‘aNEETa’ உருவாக்கியுள்ளேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!