*
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர்
* சிறந்த ஒருநாள் வீரர்
* ஆண்டின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், மற்றும் ஆண்டின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது என 3 (ஹாட்ரிக்) விருதுகளை ஒரு சேர வென்ற ஓரே வீரர் என்ற சிறப்பை பெற்றார் இந்திய அணியின் கேப்டன் கிங் கோலி.
கடந்த 2018-இல் 13 டெஸ்ட் ஆட்டங்களில் மொத்தம் 1322 ரன்கள் (சராசரி 55,08), 14 ஒரு நாள் ஆட்டங்களில் 1201 ரன்கள் (6 சதங்கள் உள்பட, சராசரி 133.55) மற்றும் 10 டி20 ஆட்டங்களில் 211 ரன்களை குவித்தார் கோலி.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸி. என அயல்நாட்டு தொடர்கள், உள்ளூரில் நடைபெற்ற மே.இ.தீவுகள் தொடர்களில் அபாரமாக ஆடினார் கோலி. இந்நிலையில் அவருக்கு ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், ஐசிசி ஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரர், ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான கேரி சோபர்ஸ் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்தது.
ஓரே நேரத்தில் இந்த 3 விருதுகளையும் வென்ற முதல் கிரிக்கெட் வீரர் கோலி ஆவார்.
கடந்த 2008-இல் மலேசியாவில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்தியாவை சாம்பியன் பட்டம் பெறச் செய்தார். மேலும் 2018-இல் டெஸ்ட், ஒரு நாள் என இரு வகையான ஆட்டங்களிலும் 1000-க்கு அதிகமாக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
வளரும் இளம் வீரர் விருது-ரிஷப் பந்த்
2018-ஆம் ஆண்டுக்கான ஐசிசி வளரும் வீரர் விருது இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்துக்கு வழங்கப்படுகிறது. 21 வயதான பந்த் டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாக ஆடியதற்காக ஐசிசி தேர்வு அகாதெமியால் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் அந்நாட்டுக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் அடிலெய்ட் டெஸ்டில் ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் 11 கேட்ச்களை பிடித்து சாதனையையும் சமன் செய்தார். மேலும் ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பெற்றார்.
2-ஆவது இடத்தில் காகிஸோ ரபாடா
கேரிசோபர்ஸ் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு கோலியின் பெயர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்க வீரர் காகிஸோ ரபாடா இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே போல் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் தேர்வு பட்டியலிலும் ரபாடா இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.
சிறந்த நடுவர் குமார் தர்மசேனா
அனைத்து அணிகளின்கேப்டன்கள், ஆட்ட நடுவர்களால் தேர்வு செய்யப்படும் ஆண்டின் சிறந்த நடுவருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருது இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு தரப்பட்டது.
மைதானத்தில் அணி வீரர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்கியமைக்காக ஐசிசி ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸனுக்கு தரப்பட்டது.
இரண்டாம் இடத்தில் ரஷீத் கான்
ஐசிசிஆண்டின் சிறந்த ஒரு நாள் வீரருக்கான போட்டியில் கோலிக்கு பின் ஆப்கானிஸ்தான் இளம் பந்துவீச்சாளர் ரஷீத் கான் இடம் பெற்றிருந்தார்.
கடந்த 2018 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான கால கட்டம், விருதுகள் வாக்கெடுப்பின் போது, கோலி தலைமையில் டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா 6 வெற்றி, 7 தோல்வியை பெற்றது. மேலும் ஒரு நாள் ஆட்டங்களில் 9 வெற்றிகள், 4 தோல்விகளை பெற்றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.
மேலும் கடந்த ஆண்டு நியூஸிலாந்தில் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் இந்திய அணி வென்றது, ரசிகர்களின் சிறந்த தருணமாக தேர்வு செய்யப்பட்டது.
விராட் கோலி பெருமிதம்…
3 விருதுகளை ஓரே நேரத்தில் பெற்றது மிகவும் பெருமிதமாக உள்ளது. ஓரே அட்டவணை ஆண்டில் கடுமையாக உழைத்தமைக்காக கிடைத்த வெகுமதிகள் இவை. என்னுடன் இணைந்துள்ள அணியுடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும் கொண்டுள்ளேன். உலக அளவில் அதுவும் ஐசிசி சார்பில் கிடைத்துள்ள அங்கீகாரம் கிரிக்கெட் வீரராக என்னை பெருமை கொள்ளச் செய்கிறது.ஏனென்றால் இந்த விளையாட்டை மேலும் பல வீரர்கள் விளையாடுகின்றனர்.
அனைவர் மத்தியில் இந்த கெளரவம் கிடைத்திருப்பது, மேலும் இதுபோன்ற செயல்களை செய்ய மிகுந்த ஊக்கம் தருகிறது. கிரிக்கெட்டைமேலும் மேம்படுத்தி, நிலையான செயல்பாடுகளை அளிக்க வேண்டும். அந்த வகையில் இந்த விருதுகள் கூடுதல் உற்சாகமே என்றார் கோலி.
ஏற்கெனவே கடந்த 2012இல் ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரர், கடந்த 2017-இல் கேரிசோபர்ஸ் விருது, ஐசிசி ஒருநாள் சிறந்த வீரர் விருதுகளையும் பெற்றிருந்தார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் கூறியதாவது-
சிறந்த ஆட்டத்திறனுக்காக கிடைத்த சிறந்த அங்கீகாரம் இது. மேலும் கிரிக்கெட்டின் மீதான அவரது மதிப்பு, குறிப்பாக டெஸ்ட் ஆட்டத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்துக்கு அளிக்கப்பட்ட பரிசாகும். நீண்ட ஓவர்கள் ஆட்டத்துக்கு அவர் தொடர்ந்து முக்கியத்துவம் தருகிறார். அனைத்து வகையான ஆட்டங்களிலும் அவர் வெற்றிகரமான வீரராக உள்ளார். கிரிக்கெட்டின் சிறந்த தூதுவராக அவர் திகழ்கிறார் என்றார்.