தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில ஊர்களின் பெயர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெவ்வேறாக குறிப்பிடப்படுகின்றன. இதனை தமிழில் குறிப்பிடுவது போன்றே மாற்றம் செய்யவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் ஏராளமானோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த தமிழக அரசு, வெவ்வேறாக குறிப்பிடப்படும் ஊர்களின் பெயர்களை ஒரே மாதிரியாக தமிழில் குறிப்பிடும் வகையில் மாற்றம் செய்ய முடிவு எடுத்தது.
இதையடுத்து எந்தெந்த ஊர்களின் பெயர்களை மாற்றம் செய்யவேண்டும் என்பது தொடர்பாக அரசு தரப்பில் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் நிறைவடைந்து, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசாணை
இதுகுறித்து சென்னையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் மாற்றம் செய்ய உள்ளோம். இதற்காக வருவாய்த்துறை, செய்தித்துறை மற் றும் தமிழ் வளர்ச்சித்துறை இணைந்து பணியாற்றி வருகிறோம். ஊர்களின் பெயர்களை மாற்றுவதற்கு, வைப்பதற்கு அதிகாரம் படைத்த அமைப்பு வருவாய்த்துறை தான்.
கலெக்டர் அளவில் ஆலோசனை கூட்டம் நடத்தி மாற்றம் செய்வதற்கான பெயர்களை தேர்வு செய்து அனுப்பியிருக்கிறார்கள். அதன்படி ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்வதற்கான அரசாணை இன்னும் 2 வாரத்தில் பிறப்பிக்கப்படும். அப்போது ‘டிரிப்ளிகேன்’ என்பது திருவல்லிக்கேணியாகவும், ‘டூட்டிக்காரின்’ என்பது தூத்துக்குடியாகவும் உருமாறும். இதேபோல தமிழகத்தில் ஆங்கிலத்தில் இருக்கும் 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்படி ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பெயர்கள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது.
error: Content is protected !!