விமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கிங் தீவுக்கு ஒருவர் விமானத்தில் சென்றார். இது பைபர் பா-31 (Piper PA-31 ) என்ற சிறிய ரக விமானம். இதில் அவர் மட்டுமே பயணம் செய்தார். விமானத்தை அவரே இயக்கினார்.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது அவருக்கு லேசாக தூக்கம் வந்தது.இருக்கையில் அமர்ந்தவாறே தூங்கிவிட்டார். திடீரென்று விழிப்பு வந்து பார்த்தபோது இறங்க வேண்டிய இடத்தை விட்டுவிட்டு, 46 கி.மீ தூரம் அதிகமாக விமானம் வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக விமானத்தைத் திருப்பி கிங் தீவில் இறக்கினார்.

இதையடுத்து அந்த விமானியிடம் ஆஸ்திரேலிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விமான நிலையத்தில் கடந்த வருடம் விமானம் புறப்படும்போது விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!