சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயக்கக்கூடிய, ‘181’ என்ற கட்டணம்இல்லா டெலிபோன் எண் சேவையை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் சேவை இல்ல வளாகத்தில், 41.51 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த சேவை மையக் கட்டடம். அத்துடன், செங்கல்பட்டு, அரசு மருத்துவமனை வளாகத்தில், 10 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட, ஒருங்கிணைந்த சேவை மைய கட்டடம் ஆகியவற்றை, முதல்வர் பழனிசாமி, நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைத்தார்.ஒருங்கிணைந்த சேவை மையம் என்பது, பொது இடங்களிலோ, குடும்பத்திலோ, பணிபுரியும் இடத்திலோ பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, துணைபுரியும் திட்டம். உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, வயது, ஜாதி, மதம், கல்வி போன்ற, எந்தவித பாகுபாடுமின்றி, உதவி அளிக்கும் திட்டம்.இத்திட்டத்தில், குடும்ப வன்முறை, பாலியல் கொடுமையால், பாதிக்கப்படும் பெண்கள், அவசர உதவி பெறும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும், ‘181’ கட்டணமில்லா டெலிபோன் எண் சேவையையும், நேற்று முதல்வர் துவக்கி வைத்தார்.அவசர காலங்களில், பெண்கள், இந்த எண்ணை தொடர்பு கொண்டு, காவல் துறை, மருத்துவமனை, ஆம்புலன்ஸ், சட்ட ஆலோசனை போன்ற உதவிகளை பெறலாம். பெண்கள் நலத் திட்டங்கள் குறித்த விபரங்களையும் கேட்டறியலாம்.மேலும், அரசின் திருமண உதவி திட்டத்தின் கீழ், திருமாங்கல்யம் செய்ய, 8 கிராம் தங்கத்துடன், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; பட்டதாரி பெண்களுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.இதற்காக, நடப்பாண்டு, 724 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1.11 லட்சம் பேர் பயன் பெற உள்ளனர். அதில், ஏழு பெண்களுக்கு, தங்க நாணயம் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சரோஜா, பெஞ்சமின், பாண்டியராஜன், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் பங்கேற்றனர்.திருநங்கையருக்கு நிதியுதவிதிருநங்கையர் நல வாரியம் சார்பில், அவர்கள் தொழில் துவங்கவும், கல்வி பயிலவும், ஆண்டுதோறும், 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. தொழில் துவங்குவதற்கான மானியத் தொகை, 20 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.இதனால், 150 திருநங்கையர் பயன் பெறுவர். நேற்றைய நிகழ்ச்சியில், ஐந்து பயனாளிகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.