ராமேஸ்வரம் : பாம்பன் ரயில் பாலத்தில் இரும்பு பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் 104 வயது பாம்பன் பாலத்தின் பலம் குறித்த கவலை எழுந்துள்ளது.

பாம்பன் கடலில் ரயில், கப்பல்கள் கடந்து செல்லும் வகையில் துாக்கு பாலம் அமைக்கும் பணி 1903ல் துவங்கியது. ஜெர்மன் பொறியாளர் ஜெர்ஷர் வடிவமைப்பில் 228 டன் எடையில் துாக்கு பாலம் அமைத்தனர். 146 துாண்களுடன் இந்தியாவில் கடல் மீது அமைந்த முதல் ரயில் பாலம் என்ற பெருமையுடன் 1914 பிப்.,24ல் இங்கு ரயில் சேவை துவங்கியது. அன்று முதல் இன்று வரை ராமேஸ்வரம் தீவை இணைக்கும் கேந்திரமாக, வரலாற்று சின்னமாக பாம்பன் ரயில் பாலம் உள்ளது.

புயல் கடந்த பாலம்:

1964 டிச.,22ல் வீசிய புயலில் சேதமடைந்து 45 நாட்களில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது. அகல ரயில் பாதைக்காக 2006 ஜூலை 15 முதல் ரயில் சேவையை நிறுத்தப்பட்டு 2007 ஆக. 12ல் மீண்டும் துவங்கியது. 2014 ஜன.,13ல் இந்திய கடற்படை கப்பல் மோதி பாலத்தில் 121வது துாண் சேதமடைந்தது. இதையடுத்து 7 நாட்கள் ரயில் சேவை ரத்தானது.

தற்போது டிச.,4ல் துாக்கு பாலம் பிளேட்டில் ஏற்பட்ட விரிசலால் மூன்று நாட்களாக ரயில் செல்ல தடை விதிக்கப்பட்டது. 104 வரலாற்றில் முதன்முறையாக தற்போது தான் பாலம்பராமரிப்பு குறைபாட்டால் பழுதடைந்துள்ளது.2 நாட்களுக்கு முன் பாலத்தில் ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப் பட்டாலும், பாலம் பலமின்றி உள்ளதை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெளிவாக விளக்கினர். இதைக்கேட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

நவீன கருவி மூலம் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுஉள்ளனர்.இதனால் பாம்பன் பாலத்தின் நிலை குறித்து பயணிகளிடம் அச்சம் எழுந்துள்ளது. வரலாற்று சின்னமாக விளங்கும் பாலத்தை விரைவில் பழுது நீக்கி மீண்டும் போக்குவரத்தை துவக்க வேண்டும் என்பதே சுற்றுலா, சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

error: Content is protected !!