கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக 72.26 லட்சம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியில் பதிவுகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை 72 லட்சத்து 26 ஆயிரத்து 792 ஆக உள்ளது.
வயது வாரியாக விவரம்: பள்ளிப் படிப்பை முடித்த 18 வயதுக்குள்ளான மாணவர்கள் 19 லட்சத்து 80 ஆயிரத்து 734 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 14 லட்சத்து 49 ஆயிரத்து 613 பேரும், 24 வயது முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26 லட்சத்து 84 ஆயிரத்து 780 பேரும், 36 வயது முதல் 56 வயதுள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 11 லட்சத்து 5 ஆயிரத்து 332 பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர்களில் 6 ஆயிரத்து 333 பேரும் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக 72 லட்சத்து 26 ஆயிரத்து 792 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகள் ஆர்வம்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளும் ஆர்வத்துடன் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். கை, கால் குறைபாடுடையோர்களில் 99 ஆயிரத்து 111 பேரும், பார்வையற்றோரில் 15 ஆயிரத்து 330 பேரும், செவித்திறனற்ற-வாய் பேச முடியாதோரில் 13 ஆயிரத்து 745 பேரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். மொத்தமாக, 1 லட்சத்து 28 ஆயிரத்து 186 மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.