தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புத் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை வரும் 21-ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வரும் 21-ஆம் தேதி, நடுநிலைப் பள்ளி வளாகங்களில் செயல்படும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி ஆங்கில வகுப்பு சேர்க்கையைத் தொடங்க தமிழக முதல்வர்இசைவு தெரிவித்துள்ளார்.
இதன்படி தமிழகத்தில் 2,381 பள்ளிகளில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 52,000 குழந்தைகள் பயன்பெறுவர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க அங்கன்வாடி மையங்களில் இது போன்ற ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்படுகிறது.
சுகாதார பழக்க வழக்கங்கள், கைக் கழுவுதல், தன் சுத்தம், உணவு முறை இவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை இந்தப் பள்ளிகள் ஏற்படுத்தும்.
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குழந்தைகள் விரும்பி படிப்பதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். பள்ளிக் கல்வி மற்றும் சமூக நலத் துறையின் சார்பில் ரூ. 7.30 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் படிப்படியாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 181 கட்டணமில்லா தொலைபேசி திட்டம் மூலம் பெண்களுக்கு சமூக பாதுகாப்பு ஏற்பட்டுள்ளது.
பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக இந்த தொலைபேசி எண்ணில் புகார்கள் பெற்றுக் கொள்ளப்படும். இதற்காக பெரம்பூரிலிருந்து தனி மையம் 24 மணி நேரமும் செயல்படும்.
11 பேர் இதில் ஆலோசனைகளை வழங்குவர். இந்த தொலைபேசியில், இதுவரை 14,400 அழைப்புகள் வர பெற்று 2,360 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தேசிய குழந்தைகள் தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக பெண்கள் பாதுகாப்பைப் பராமரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி சான்றிதழ் கடந்த ஆண்டு 3. 60 லட்சம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல நிகழாண்டில் 4.60 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வியும், தொடக்கக் கல்வியும் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 2.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள்கள் உற்பத்திக்கான தொழில் தொடங்க ரூ. 12,000 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் மூலம் தமிழக அரசு தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக வர பேருதவியாக இருக்கும் என்றார்.