தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குநர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகளை கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி தொலைக்காட்சிக்கான படப்பிடிப்பு தளம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், ஹெலி கேமரா ஆகியவற்றுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் புதிய முறைகள், கல்வித்துறையில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர்களை பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவிகள், இதன்மூலம் அவர்கள் கல்வி கற்கும் திறன் போன்றவை இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். இதற்காக ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து சாதனையாளர்களாக வருவது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு அறநெறி குறித்த வகுப்பு, சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து திறமைகளை வளர்க்கும் வகையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அமையும்.
இதுதவிர பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் பற்றி நிகழ்ச்சிகளும் மாணவர்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் டி.வி.யில் 200-ஆவது சேனலாக இடம் பிடித்துள்ளது. தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பை வரும் 21-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கிவைக்கவுள்ளார்.

error: Content is protected !!