சென்னை: அரசு பள்ளிகளில், மழலையருக்கான, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து, அரசு பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகளுக்கான புதிய திட்டத்தை அறிவித்து உள்ளன. இதன்படி, மாநிலம் முழுவதும், 32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டு உள்ளன.அதேபோல, தொடக்க பள்ளிகளுக்கு அருகேயுள்ள, 2,381 அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. இதற்கு முன்னோட்டமாக, கே.ஜி., வகுப்பு திட்டத்தின் துவக்க விழா, சென்னை எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலை பள்ளியில், நேற்று நடந்தது.முதல்வர் பழனிசாமி திருவிளக்கேற்றி, கே.ஜி., வகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தார். துணை முதல்வர், பன்னீர் செல்வம், பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன், சமூக நலத்துறை அமைச்சர், சரோஜா, அமைச்சர், ஜெயக்குமார் உட்பட, பலர் பங்கேற்றனர்.இந்த பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, புதிய எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்பறைகளை, முதல்வர் பழனிசாமி பார்வையிட்டார். மாணவர்களுக்கு பயிற்று விக்கப்பட உள்ள, ‘மான்டிசோரி’ எனப்படும் குழந்தைகள் நல கல்வி முறை பற்றியும், ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.