தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வெள்ளிக்கிழமை அவர் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:
கடந்த 22-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சில தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகளைத் திறக்க மாவட்ட, தலைமை கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்தனர். அதன்படி, தனியார் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களைப் பெற்று அரசுப் பள்ளிகளை நடத்தினர். இந்த நிலையை தொடர்ந்து நீடிக்க விடமுடியாது.
எனவே, தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பணிக்குத் திரும்ப வேண்டுமென ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது. இந்த நிலையில், மிகப்பெரிய அளவுக்கு ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்கும் பணியில் மாவட்ட ஆட்சியர்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானதாகும். எனவே, அரசுப் பள்ளிகள் எந்தத் தடையும் இல்லாமல் இயங்கிட மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட முறையிலான அக்கறை காட்ட வேண்டும்.
மேலும், பணிக்கு வராத, தவறிழைக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.