மாணவர்கள் மென்பொருள் பயிற்சிகள் பெற ஏதுவாக தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவும் இணைந்து இளம் தொழில்முனைவோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அண்மையில் செய்துள்ளன. பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர், பதிவாளர் சே.சந்தோஷ்பாபு, இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவின் மூத்த நிதி அதிகாரி தேவேகார வெங்கண்ணா ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதன்மூலம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு, கணினி மென்பொருள் மற்றும் பல்வேறு கணினி சார்ந்த தொழில்சார் சேவைகள், மென்பொருள் ஏற்றுமதி சேவைகள் உள்ளிட்டவை உருவாகும். இதற்காக கால்நடை வளர்ப்புத் துறையின் வசமிருந்த 546.98 ஏக்கர் நிலம், சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில் ரூ.11.7 கோடி செலவில் நிரந்தர பட்டா பெறப்பட்டு, அதில் மூன்று ஏக்கர் நிலம் இத் தொழில்நுட்ப பூங்காவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
புதிய மையத்தில் மாணவர்கள் மென்பொருள் உருவாக்கம், பயிற்சியை எளிதாகப் பெற முடியும். மேலும், புதிய மென்பொருள் நிறுவனம் பல்கலைக்கழக வளாகத்தில் உருவாகவும், அதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் வேலைவாய்ப்பையும், தொழில்முனைவோர் மென்பொருள்களையும் பெற வாய்ப்பு உருவாகும் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.