புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி எம். ராஜ்குமார் இந்திய வனப் பணித் தேர்வில் (ஐஎப்எஸ்) மாநிலத்தில் 14 பேரில் ஒருவராகத் தேர்ச்சிப் பெற்றுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) முதன்மைத் தேர்விலும் அவர் தேர்வாகியுள்ள நிலையில், மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நேர்காணலில் பங்கேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலகக் கண்காணிப்பாளர் ஆர். மனோகரன், புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியை எஸ். சிவகாமசுந்தரி ஆகியோரின் மகன் எம். ராஜ்குமார் . ராமநாதபுரம் சையது அம்மாள் அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 படித்தபோது, மாவட்ட அளவில் இரண்டாமிடம் எடுத்த ராஜ்குமார், அண்ணா பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் பட்டம் பெற்றார்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணயத்தின் இந்திய வனப் பணித் தேர்வில் (ஐஎப்எஸ்) தமிழகத்தின் 14 பேர் உள்பட நாடு முழுவதும் 89 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ராஜ்குமார்.
இதுகுறித்து ராஜ்குமார் கூறியது: பள்ளிக் கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் முடித்தேன். அறிவியல் துறையில் ஆர்வமிருந்ததால் வானூர்திப் பொறியியல் முடித்தேன். அதன்பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வுகளின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அதற்காகப் படித்தேன்.
தற்போது ஐஎப்எஸ் தேர்வில் தேர்வாகியுள்ளேன். வரும் மார்ச் 14ஆம் தேதி ஐஏஎஸ் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறவுள்ளது. அதில் ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் கிடைத்தால் இதைத்தான் தேர்வு செய்வேன். கிடைக்காதபட்சத்தில் தற்போது தேர்வாகியுள்ள வனப்பணியை எடுத்து இரண்டாண்டுப் பயிற்சியை முடித்து, வனப் பணிக்குச் செல்வேன்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்போர் கொஞ்சமும் கூட நம்பிக்கையை இழக்கத் தேவையில்லை, உறுதியாக எல்லா உயர்கல்விக்கும் செல்லலாம் என்றார் ராஜ்குமார்.