விரைவில் புதிய தேர்வு விதிகள் அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை,’இன்ஜினியரிங் தேர்வுகள் குறித்து, புதிய விதிகள் வெளியிடப்படும்’ என, அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் கட்டட வடிமைப்பியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், இன்ஜினியரிங் இணைப்பு கல்லுாரிகளுக்கு, 2017ல், புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது.இந்த தேர்வு முறையில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான, ‘அரியர்’ தேர்வு முறையில், மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, உடனே தேர்வு எழுத முடியாது; ஓராண்டு கழித்து தான் எழுத முடியும்.இதற்கு, மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; பல்கலை முன் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், நேற்று அண்ணா பல்கலை பொறுப்பு பதிவாளர், குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த, 2017ல், அறிமுகம் செய்யப்பட்ட, தேர்வு ஒழுங்குமுறைகளில் மாற்றம் செய்வது குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது. பல்வேறு துறை நிபுணர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.ஒவ்வொரு, ‘செமஸ்டர்’ பருவத்திலும், மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு, எப்போது தேர்வு எழுதுவது என்பது குறித்து, விரைவில், புதிய விதிகள் வெளியிடப்படும். எனவே, மாணவர்கள், தங்கள் நேரத்தை வீணடிக்காமல், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!