புதுடில்லி: ‘சிவில் சர்வீஸ் தேர்வு களுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் ௭௫’ என்ற தலைப்பில், அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, சமீபத்தில் தாக்கல் செய்தது.அதில், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பொதுப்பிரிவினரின் வயது உச்ச வரம்பை, ௨௭ ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றிருந்தன.இந்நிலையில், ‘சிவில் தேர்வுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் எதுவும், பரிசீலனையில் இல்லை’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.இதுகுறித்து, பிரதமர் அலுவலக விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ”சிவில் சர்வீஸ் தேர்வில், வயது உச்ச வரம்பை குறைப்பது தொடர்பான பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்றார்.