சென்னை:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தராக, பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு பல்கலை.,களின் வேந்தராக, கவர்னர் செயல்படுகிறார். தமிழக பல்கலை.,களில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை துணைவேந்தர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில பல்கலைகளில், துணைவேந்தர் நியமனத்தில், ஒன்றரை ஆண்டுகள் வரை, கால தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின், எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தகுதியிருந்தால் துணைவேந்தராக நியமிப்பது, துணைவேந்தர் தேடல் குழுவில், சிறந்த கல்வியாளர்கள் மற்றும் நடுநிலையாளர்களை நியமிப்பது என, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் துணைவேந்தர், பாஸ்கரின் பதவி காலம், பிப்., 8ல் முடிந்தது. ஒரு வாரத்திற்குள், புதிய துணைவேந்தரை, கவர்னர் நியமித்துள்ளார். மதுரை காமராஜ் பல்கலையின் வேதியியல் துறையில், கவுரவ விஞ்ஞானியாக உள்ள, பேராசிரியர் பிச்சுமணியை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் துணைவேந்தராக, மூன்றாண்டுகளுக்கு பணியாற்ற, கவர்னர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.
பேராசிரியர் பிச்சுமணி, கற்பித்தல் பணியில், 37 ஆண்டுகள் அனுபவம் உடையவர்.ஜப்பானின், டோக்கியோ மற்றும் தைபை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், கவுரவ பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.மதுரை காமராஜ் பல்கலையின் பதிவாளர் பொறுப்பில் இருந்துள்ளார். பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,யின் கவுரவ பேராசிரியராகவும் இருந்துள்ளார்.துணைவேந்தர் ஓய்வு பெற்று, ஒரு வாரத்திற்குள், புதிய துணைவேந்தரை நியமித்திருப்பது, பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை மகிழ்ச்சி அடையச்செய்து உள்ளது.

error: Content is protected !!