அரசு பள்ளிகளில் மாணவர்கள் வருகையை கண்காணிக்க அலைபேசி செயலியை கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. இதற்காக உருவாக்கிய, ‘டி.என்., ஸ்கூல் அட்டனன்ஸ்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் பதிவு செய்ய ஒவ்வொரு பள்ளிக்கும் பயனீட்டாளர் பெயர், கடவுச் சொல் கொடுக்கப்பட்டன. தினமும் காலை, மதியம் என, இரு வேளையும் மாணவர்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். இவ்விபரம் வட்டார கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு செல்லும்.இதனை தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டுமென, கல்வித்துறை தெரிவித்தது. ஆனால் பெரும்பாலான பள்ளிகள் முறையாக வருகை பதிவு செய்வதில்லை. ஜன., 5 ல் ஆய்வு செய்ததில் 37,456 பள்ளிகளில், 12,889 பதியவில்லை என்பது தெரிந்தது. அப்பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.செயலியை பயன்படுத்துவதில் சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் 50 சதவீதத்திற்கும் குறைவான பள்ளிகளே பதிகின்றன. ஒரு மாவட்டத்தில் கூட 100 சதவீதத்தை எட்டவில்லை. மாநில அளவில் 65.59 சதவீத பள்ளிகளே பதிகின்றனர்.கல்வித்துறைஅதிகாரி ஒருவர் கூறுகையில், ”இன்டர்நெட் இணைப்பு கிடைக்காவிட்டாலும் பதியலாம். இணைப்பு கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் சென்றுவிடும். பல பள்ளிகளில் மாணவர்கள் வருகையை பதிவு செய்கின்றனர். ஆனால் அனுப்ப தெரிவதில்லை. இதனால் சிக்கல் ஏற்படுகிறது,” என்றார்