சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக, தமிழகத்தில், முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை, அமைச்சர்கள் நேற்று துவக்கி வைத்தனர்.முதியவர்களுக்கு வரும் இருமல், சளி தொல்லைகளில், நிமோனியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோயின் முதல் அறிகுறி, காய்ச்சல், உடல் வலி, வாந்தி. இதைத் தொடர்ந்து, இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை தோன்றும். இருமல் அதிகரிக்கும் போது, சிலருக்கு சளியில் ரத்தமும் கலந்திருக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்நோய், காது, தலை மற்றும் மூளையை பாதித்து, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். மிகவும் வயதானவர்களுக்கு, இந்நோய் மனக்குழப்பம், கீழே விழுதல் மற்றும் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலையையும் ஏற்படுத்தும். எனவே, இந்நோய் வராமல் தடுப்பதே நல்லது.அதனால், 50 வயதை கடந்தவர்கள், ஒரே ஒரு முறை, இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டால் போதும். ஒரு சிலருக்கு மட்டும், சில ஆண்டுகள் கழித்து தேவைப்பட்டால், இரண்டா வது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இந்த தடுப்பூசியால், பக்க விளைவுகள் கிடையாது.தடுப்பூசி போட்டுக் கொள்வதால், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு, இந்நோய் வராமல் தடுக்கப்படுகிறது. அரசு மானியம் பெறும் முதியோர் இல்லங்களில் தங்கி பயன்பெறும் முதியவர்களுக்கு, நிமோனியா தடுப்பூசி போடப்பட உள்ளது.இத்திட்டத்தை, சென்னை, வியாசர்பாடியில் உள்ள, செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை செயலர் மணிவாசன், கமிஷனர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
error: Content is protected !!