சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர ரோபோ அனுப்ப இஸ்ரோ திட்டம்: விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தகவல்

சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர, ரோபோவை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக, பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார்.
நாகர்கோவிலில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது. சந்திரனுக்கு மனிதனை அனுப்ப ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. முதல் முயற்சியாக, ரோபோவை விரைவில் அனுப்ப உள்ளோம்.
தற்போது நடந்து வரும் ஆய்வில், சந்திரனில் ஹீலியம் வாயு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது அரியவகை மூலப்பொருளாகும். ஒரு கிராம் ஹீலியம் வாயு 1000 யுரேனியத்துக்கு சமம். ஹீலியம் கதிர்வீச்சு அற்றது. அதை பாதுகாப்பாக சந்திரனில் இருந்து கொண்டுவர, இங்கிருந்து ரோபோ ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. மனிதனை சந்திரனுக்கு அனுப்புவதில், ரஷியாவுக்கும் நம்மோடு பங்கு உள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை, உலகிலேயே அதிக வேகம் கொண்டது. தற்போது, அதைவிட 7 மடங்கு வேகம் கொண்ட ஏவுகணை தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

error: Content is protected !!