பள்ளி மாணவர், மாணவிகள் தனித்திறமைகளை வளர்க்க ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன்.

 நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 29  ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு  தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்து ஆயர் பேசியது:
அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவில் கல்வி, அறிவுத்திறன் போட்டிகள், விளையாட்டு, கலை- அறிவியல் என, பல துறைகளில் தொடர்ந்து சாதனை படைத்து வருவதோடு மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சிக்கும் மேடை அமைத்துக் கொடுத்துவருகின்றது.
மாணவர்களுக்குப் பள்ளிப் பருவம் மிக முக்கியமான காலக்  கட்டமாகும். இந்தக் காலக்கட்டத்தில் மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளைக் கண்டுபிடித்து அதைமேலும் வளர்க்க வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பள்ளிகளில் அளிக்கப்படும் வாய்ப்புகளை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்  என்றார் அவர்.
நிகழ்ச்சியில், பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சேவியர் சந்திரபோஸ்  வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளாக  பள்ளித் தாளாளராக இருந்து, கல்விப் பணியாற்றி வரும் பேரருட்தந்தை தாமஸ் பெளவத்துப்பறம்பிலுக்கு ஆயர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
பள்ளி முதல்வர் அருட்சகோதரி லிசபெத், துணை முதல்வர் அருட்தந்தை அஜின் ஜோஸ், உயர்நிலைப் பிரிவுகளின் துணைமுதல்வர் பிரேம்கலா, தலைமை  ஆசிரியர் மேனிக்கா ஸ்பினோலா மற்றும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!