தமிழில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறினார்.
கோவையில் செயல்படும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விருது, விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த தமிழியல் ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்பட்டது. இதற்குத் தலைமை வகித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியது:
தமிழ் மொழியின் வரலாறு, தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து கட்டுரை எழுதுவது தவத்துக்கு ஒப்பானது. இதற்கு தமிழ் ஆர்வமும், நேர்மையும் அவசியம். ஆனால், இதுபோன்ற கடும் ஆய்வுகளுக்குப் பின்னர் எழுதப்படும் புத்தகங்களுக்குப் போதிய வெளிச்சம் கிடைக்காதது வருத்தம் அளிக்கக்கூடியதாகும். இந்நிலை மாற வேண்டும். தமிழ் அறிஞர் உ.வே.சா. குறித்தும், அவரது தமிழ்ப் பணிகள் குறித்தும் தமிழியல் ஆய்வாளர் ப.சரவணன் எழுதிய புத்தகத்தை அனைவரும் வாசிப்பது மிகவும் அவசியம்.
தற்போது ஆய்வு நூல்கள் தமிழகத்தில் போதுமான அளவு வெளிவரவில்லை. இளைஞர்கள் நவீன இலக்கியத்தின் பக்கம் மட்டுமே தங்களது கவனத்தைச் செலுத்தாமல் வரலாற்றை மீட்டெடுக்க உதவும் வகையில் ஆய்வு நூல்களை எழுதவும் முன்வர வேண்டும்.
எழுத்தாளர்கள் விரும்புவது அங்கீகாரத்தை மட்டுமே. அங்கீகரிக்கப்படும்போது மட்டுமே தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உந்து சக்தி எழுத்தாளர்களுக்கு ஏற்படும். எனவே, தகுதியான எழுத்தாளர்களைக் கண்டறிந்து அவர்களை அங்கீகரிக்க வேண்டும் என்றார்.
தமிழ் அறிஞர் டி.பாலசுந்தரம், விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம், சிறுவாணி வாசகர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ், தலைவர் தி.சுபாஷிணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.