ஆசிரியர்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஒருங்கிணைந்த கல்வி கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் வருகைப் பதிவு, செயலியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஆசிரியர்களின் வருகையும் அதே செயலியில் பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வருகைப் பதிவை தினமும் பதிவு செய்ய வேண்டும். இதில் ஆசிரியர்களின் வருகைப் பதிவை தலைமையாசிரியர் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
வருகைப்பதிவில் ஏதேனும் தவறு இருப்பின் தலைமையாசிரியர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும். இந்த செயலியின் பதிவுகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
எனவே, ஆசிரியர்களின் வருகைப் பதிவை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த வகையிலும் பதிவு செய்ய இயலாது என அதில் கூறியுள்ளார்.