கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பில் 65  சிற்றினங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பறவைகள் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. நிகழாண்டு இக்கணக்கெடுப்புப் பணி  3 கட்டங்களாக நடைபெற்றது.  மாவட்ட வன அலுவலர் எஸ். ஆனந்த் தலைமையில் வனத்துறை அலுவலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டாக்டர் ராபர்ட் பி. கிரப், சைலஜா கிரப், சூழல் கல்வியாளர் எஸ்.எஸ். டேவிட்சன் உள்ளிட்டோர் அடங்கிய  பல்வேறு குழுக்களாக கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.
சுசீந்திரம், தேரூர், தத்தையார்குளம், சாமித்தோப்பு,  பறக்கை, புத்தேரி, மணக்குடி, புத்தளம், பால்குளம்,  ஆகிய பகுதிகளில் ஆய்வில்  ஈடுபட்டனர்.  இதில், சுசீந்திரம் குளத்தில் வெளிநாட்டில் பனிப் பிரதேசத்தில் வசிக்கும் கேதை உல்லான் என்ற அரிய வகை பறவையும், பூ நாரைகள், நாம தாரா, மஞ்சள் மூக்குதாரா, தீல் போன்ற வெளிநாட்டுப் பறவைகளும், விசில் வாத்து, ஊசிவால் வாத்து, மண்வெட்டி தாரா, தாமரை இலைக்கோழி, செங்கால் நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், கூழக்கடா உள்ளிட்ட பறவை இனங்களும் காணப்பட்டன.
கணக்கெடுப்பு குறித்து பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் கிரப் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வடதிசையில் இருந்து பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. செங்கால் நாரைகள் அதிகமாக காணப்படுகின்றன. இப்பறவைகள் குமரி மாவட்டம் மணக்குடியில்தான் அனைத்து பருவ நிலைகளிலும் வாழ்கின்றன.  பிற பகுதிகளில் இந்த பறவைகள் குறிப்பிட்ட காலத்தில்தான் காணப்படும்  என்றார்.
சைலஜா கிரப் கூறுகையில், கால சூழல் மாற்றத்தால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பறவைகள் வரத்து வெகுவாக
குறைந்து காணப்படுகிறது என்று குறிப்பிட்டார். சூழல் கல்வியாளர் டேவிட்சன் கூறுகையில்,  விஜ்ஜிலியான், கார்கரி, மண்வெட்டிதாரா போன்ற வெளிநாட்டு பறவைகள் இம்மாவட்டத்துக்கு அதிகளவில் வருகை தருவதுண்டு. தற்போது அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016 இல் ஏற்பட்ட ஒக்கி புயல் மற்றும் வாழ்விட அச்சுறுத்தல், மனித தலையீடு காரணமாகவும் பறவைகள் வரத்து குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.

error: Content is protected !!