திருக்குறள், சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என உலகத் தமிழ்ச்சங்க முன்னாள் இயக்குநர் பசும்பொன் குறிப்பிட்டார்.
நாகர்கோவில் குறளகம் அமைப்பின் 9 ஆம் ஆண்டு தொடக்கவிழா இருளப்பபுரத்தில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். பசுபதீஸ்வரர் பள்ளி முதல்வர் ஜெயசுதா குத்துவிளக்கு ஏற்றினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பசும்பொன் பேசியது: தமிழகத்துக்கு பல பெருமைகள் உண்டு. பண்டைய தமிழ் நாகரிகம் உலகில் வேறு எங்கும் இல்லாத பழம்பெருமை வாய்ந்தது. சங்க இலக்கியங்கள், திருக்குறள் காட்டும் வாழ்வியல் அறங்களை மாணவர்கள் பின்பற்றினால் வாழ்வில் மேன்மை அடையலாம். திருக்குறள் பயிற்சி என்பது இன்றைய சூழிலில் அனைவருக்கும் தேவையானது என்றார் அவர்.
விழாவில், மனித வளமேம்பாட்டு தியான மன்றத் தலைவர் சுயஸ்ரீ பழனிசுவாமிகள் வாழ்த்திப் பேசினார். குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி எழுதிய கவிமணி பிள்ளைத் தமிழ் நூலை மதுரை சௌராஷ்டிரா கல்லூரி பேராசிரியை சித்ரா வெளியிட தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகப் பேராசிரியை ஜாக்குலின் பெற்றுக்கொண்டார். நூல் குறித்து தமிழ்த்துறைத் தலைவர் திலகவதி, மதிப்புரை வழங்கினார்.
விழாவில், 1330 திருக்குறளை பயின்று தேர்ச்சி பெற்ற மனோவுக்கு பொற்கிழி, விருதினை குறளகம் நிறுவனர் வழங்கிப் பாராட்டினார். குறளக மாணவிகள் வர்ஷினிப்பிரியா, கௌசிகா, மகாலட்சுமி ஆகியோருக்கு திருக்குறள் செல்வி எனும் விருதினை கொடிக்கால் ஷேக்அப்துல்லா வழங்கினார்.
பச்சை தமிழகம் நிறுவனர் சுப. உதயகுமாரன், பாவலர் சித்திக், கோவிந்தன், நகரச் சுழற் சங்கத் தலைவர் சிதம்பரம்பிள்ளை, சென்னை உலகத் திருக்குறள் மைய பொதுச்செயலர் குமரிச்செழியன், ஈரோடு அரச மாணிக்கம், கரூர் தமிழ் ராஜேந்திரன், தஞ்சை இராம. சந்திரசேகர், கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை இயக்குநர் பகவதிபெருமாள், முனைவர் லாரன்ஸ்மேரி, மருத்துவர்கள் சண்முகம், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, திருக்குறள் போட்டியினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிருந்தா தொடங்கி வைத்தார். குறளகம் ராஜேந்திரன் வரவேற்றார்.

error: Content is protected !!