மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற இந்திய மூத்தோர் தடகளப் போட்டியில்,  குமரி மாவட்ட 72 வயது பெண் 3 தங்கம், ஒரு வெண்கலப்  பதங்கங்களை வென்று சாதனை படைத்தார்.
நாசிக் நகரில் கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாஸ்டர்ஸ் அத்லெட்டிக்ஸ் ஆப் மகாராஷ்டிரம் என்ற அமைப்பு சார்பில் 39ஆவது  தேசிய மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து  குமரி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் ஒருங்கிணைப்பில் 8 பெண்கள் உள்பட 35 பேர் பங்கேற்றனர். இதில், 70 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் தடிக்காரன் கோணம் காமராஜர்புரத்தைச் சேர்ந்த மேரி ஜாய் (72) ஆயிரம் மீட்டர் நடை, 800 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கங்களும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
சாதிப்பதற்கு வயது தடையில்லை: இதுகுறித்து மேரி ஜாய் கூறியதாவது:  நாட்டு மருத்துவம் செய்யும் கிராம செவிலியர் நான். தடிக்காரன் கோணம் கிராமத்தில் அரசு மருத்துவமனை வருவதற்கு முன்பு, இப்பகுதியில் சுமார் 1500 பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளேன். என் கணவர் அருணாசலம் கடந்த 45 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  1 மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருவருக்கும் திருமணமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். ஏற்கெனவே, தஞ்சாவூர் மற்றும் சிதம்பரத்தில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டிகளில்  தங்கப் பதக்கங்களை வென்றுள்ளேன். தற்போதைய போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களையும், ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளேன். இந்த வெற்றி எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.  வயதாகி விட்டது என யாரும் முடங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சாதிப்பதற்கு வயது ஒரு போதும் தடையாக இருக்காது. ஒவ்வொருவரும் விளையாட்டிலும் சமூக சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சாதிக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் அதிகமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத் தலைவர் ஐயப்பன் மற்றும் செயலர் ஜோசப்  கூறியதாவது:
நாசிக்கில் நடைபெற்ற மூத்தோர் தடகளத்தில் தமிழகத்திலிருந்து 110 பேர்  பங்கேற்றனர். குமரி மாவட்டத்திலிருந்து 8 பெண்கள் உள்பட 35 பேர் பங்கேற்றனர். இதில் 20 தங்கம்,  16 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. தடிக்காரன் கோணத்தைச் சேர்ந்த மேரி ஜாய்  3 தங்கம், ஒரு வெங்கலம் பெற்றார். இதே போன்று தேரூர் தேவகுளத்தைச் சேர்ந்த  வெங்கடேசன் 3 தங்கம், 1 வெள்ளி பெற்றார்.  தக்கலையைச் சேர்ந்த  இசக்கி மாடன் 1 தங்கம், 2 வெள்ளி வென்றார். வின்சென்ட் 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்றார்.  இதுவரை இல்லாத அளவிற்கு நிகழாண்டில் குமரியைச் சேர்ந்தவர்கள், மூத்தோர் தடகளத்தில்  பதக்கங்களை வென்றுள்ளனர் என்றார்.

error: Content is protected !!