நாகர்கோவிலில் புத்தகக் கண்காட்சி  வெள்ளிக்கிழமை (பிப்.15)  தொடங்குகிறது. இதில், 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம்  (B​A​P​A​S​I) ஆகியவை இணைந்து குமரி  மாவட்ட  நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சியை  பிப்.15  ஆம் தேதி முதல் 25  ஆம் தேதி வரை நாகர்கோவில் அனாதை மடம் திடலில் நடத்துகின்றன.
இது குறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  கூறியது:  தனி மனித வாழ்வின் வெற்றிக்கு புத்தகம் வாசித்தல் அவசியம் என்பதை மனதில் கொண்டு வாசிப்பை நேசிப்போம் என்ற வாசகத்துடன் 10 நாள்கள் இக்கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறந்த எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், பேச்சாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தருகின்றனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்வதன் மூலம் புத்தகம் வாசிக்கும் திறன் அவர்களிடையே மேம்படும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை இக்கண்காட்சியில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு அறிவுறுத்த வேண்டும், கண்காட்சிக்கான அனுமதி இலவசம்  என்றார் அவர்.
அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில் புத்தகக் கண்காட்சி நடைபெறும் திடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி,  நாகர்கோவில் சார் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவனர் மற்றும் அலுவலர்கள் புதன்கிழமை மாலையில் சென்று ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கூறியது:
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் குமரி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  கண்காட்சியில் 100 -க்கும்  மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கண்காட்சி அரங்குகள் அமைப்பதற்கான பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
கண்காட்சியில் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர்.

error: Content is protected !!