கல்வித்துறை சார்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு கல்விசுற்றுலா செல்ல சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் கோல்டு ஸ்டில்லர், ஒன்பதாம் வகுப்பு மாணவர் கார்த்திக்கேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் அறிவியல், தொழில் நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை கல்வி சுற்றுலாவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் பள்ளி கல்வித்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்வீடனுக்கு ஜன.20ம் தேதி செல்கின்றனர். இவர்களுக்கான 3 கோடி ரூபாய் வரையிலான செலவை தமிழக அரசே செய்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி, அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் கோல்டு ஸ்டில்லர், ஒன்பதாம் வகுப்பு மாணவர் கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

10 நாட்கள் ஸ்வீடன் மற்றும் பின்லாந்தில் உள்ள பிரபல பல்கலைகள், கல்வி நிறுவனங்களில் நடக்கும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அங்குள்ள கலாசாரம், கல்வி முறை குறித்தும் அறிந்து கொள்வர்.எம்.கார்த்திகேயன்: அப்பா மீனாட்சி சுந்தரம். டெய்லராக உள்ளார். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான அறிவியல் கருத்தரங்கு மற்றும் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய அறிவியல் கருத்தரங்கில், ‘துரித உணவுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் துன்பம்’ குறித்து பேசினேன்.

கோல்டு ஸ்டில்லர்: அப்பா அருளானந்து. திண்டுக்கல்லில் டீக்கடை வைத்துஉள்ளார். அம்மா இல்லாததால் சிறுவயதிலிருந்தே பெரியப்பா சாமுவேல் தான் என்னை வளர்த்து வருகிறார். தேசிய அறிவியல் போட்டி மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று பரிசு பெற்று உள்ளேன்.அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார்: எங்கள் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்களை தேர்வு செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் புத்தாக்க அறிவியல் ஆற்றல் மேம்படும், என்றார்.

மாணவர்களை செந்தில்நாதன் எம்.பி., கலெக்டர் ஜெயகாந்தன், சி.இ.ஓ.,பாலமுத்து, டி.இ.ஓ.,சாமி சத்தியமூர்த்தி, பள்ளி செயலர், தலைமை ஆசிரியர் வள்ளியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்

error: Content is protected !!