களியக்காவிளை அருகே செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற சாதனையைப் பெற்று, இந்திய சாதனைப் புத்தகத்தில் (இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு) இடம்பிடித்துள்ளது.
இதற்கான சான்றிதழ் வழங்கும் விழா கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு அமைப்பின் நிர்வாகி சாகுல் அமீது சான்றிதழை வழங்க, கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்தஜி சுவாமிகள், கேரள மாநில பாஜக எம்எல்ஏ ஓ. ராஜகோபால் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து, சாகுல் அமீது கூறும்போது, இக்கோயிலில் உள்ள சிவலிங்கம் 111.2 அடி உயரம் கொண்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் உயரமான சிவன் சிலைகள் உள்ளன. ஆனால் உயரமான சிவலிங்கம் வேறு எங்கும் இல்லை. இங்குள்ள சிவலிங்கமே இந்திய அளவில் அதிக உயரமான சிவலிங்கம் ஆகும். நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு, பின்னர் சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சிவலிங்கத்தின் உள்பகுதி குகை வடிவில், 8 நிலைகளை (8 மாடி) கொண்டுள்ளது. உள்பகுதி நடைபாதையின் ஓரங்களில் சித்தர்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தியானம் செய்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி தொடங்கிய சிவலிங்கம் அமைக்கும் பணி இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என, கோயில் மடாதிபதி தெரிவித்தார்.

error: Content is protected !!