பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10% இடஒதுக்கீடு அடிப்படையில் பிப்.1 முதல் பணியிடங்களுக்கு ஆள்தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் அனைத்து பணியிடங்களுக்கும் ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு மத்திய அரசு துறையில் உள்ள பணியிடங்கள், சேவைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். இதன்படி, மத்திய அரசு பணியிடங்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு, சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு ஆகியவைகளின்கீழ் வராதோரும், ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக வருடாந்திர வருமானம் கொண்ட குடும்பத்தினரும், மேற்கண்ட 10 சதவீத இடஒதுக்கீடு பயனை அடைய தகுதியுடையவர்கள் ஆவர்.
அதேநேரத்தில், சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினருக்கு சொந்தமாக 5 ஏக்கர் அல்லது அதற்கு அதிகமாக விவசாய நிலம் இருந்தாலோ, 1,000 சதுர அடி பரப்பளவு அல்லது அதை விட அதிக நிலத்தில் வீடு இருந்தாலோ, நகராட்சிகளில் 100 சதுர அடி அல்லது அதைவிட அதிக நிலம் இருந்தாலோ, பிற பகுதிகளில் 200 சதுர அடி அல்லது அதை விட அதிகமாக நிலம் இருந்தாலோ, அவர்கள் மேற்கண்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட நபரது குடும்பத்தின் வருடாந்திர வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
10 சதவீத இடஒதுக்கீட்டு பயனை பெற விரும்பும் நபர், தமது குடும்ப வருமானம், சொத்து குறித்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அந்த சான்றிதழில் தாசில்தார் பதவிக்கு குறையாத பதவியில் இருக்கும் அதிகாரிகள் கையொப்பமிட்டிருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிவிப்பை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிடும் என்று அந்த அறிவிப்பில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 9ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!